அவர்கள் அநேகர்!
திரளான கூட்டமாய்க் கூடி, என்னோடு எதிர்த்தார்கள்; அவரோ எனக்கு நேரிட்ட போரை நீக்கி, என் ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார். சங் 55:18.
ஒரு முறை, அசுத்த ஆவி பிடித்த ஒரு மனிதன் இயேசுவிடம் கொண்டு வரப்பட்டான். அந்த மனிதன் இயேசுவிடம், "நாங்கள் அநேகராய் இருக்கிறோம்" என்று கூறினான். ஆனாலும் அந்த மனிதன் விடுதலையாக்கப்பட்டான் (மாற். 5:1-20). நாமும் கூட பெரும்பாலான நேரங்களில் நம் சத்துரு நம்மைக்காட்டிலும் பலமிக்கவன் என்று சிந்திக்கிறதில்லையா?
தாவீதுக்கு முன்பாக கோலியாத்தே பலமிக்கவன் போலத் தோன்றினான் (1சாமு17). அமலேக்கியரின் மிகப்பெரிய சேனைக்கு விரோதமாய் யுத்தம் பண்ணுவதற்காக, கிதியோன் எப்படியோ ஒருவழியாக 32,000 பேரை ஏற்பாடு பண்ணினான். ஆனால் தேவனோ, அவர்களை வெறும் 300 பேராகக் குறைக்கத் தீர்மானித்தார் (நியா 6-7). வேதத்திலுள்ள இப்படிப்பட்ட எல்லா உதாரணங்களிலும், யார் யார் தேவனைத் தங்கள் பக்கமாக நிற்கும்படித் தெரிந்து கொண்டார்களோ, அவர்கள் யுத்தத்தை ஜெயித்தார்கள்.
கர்த்தர் நம்மோடு கூட இருக்கிறாரென்றால், நாம் பலவீனமாய் இருக்கும்போதே பலமுள்ளவர்களாய் இருக்கிறோம் (2 கொரி 12:10). பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி, தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்து கொண்டார் (1கொரி 1:27).
தேவனற்றிருக்கும் பலரல்ல; தேவனோடிருக்கும் ஒருவனே எப்பொழுதும் பலவான்!
ஜெபம்: ஆ கர்த்தாவே! சத்துருவோடு யுத்தம் பண்ணுகையில், நான் எப்பொழுதும் உம்மோடு சேர்ந்துகொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment